டாமி & தீபாவளி

 குட்டீஸ்களுக்கு  தீபாவளி வந்துவிட்டாலே குதூகலம் தான்.  ஒரு சில வாரங்களுக்கு முன்பே அதைப்பற்றி பேச்சு வரும்.  பள்ளி சென்று வரும்பொழுது, விளையாடும் பொழுது, பள்ளி வகுப்பிலும். அப்படிப் பேசிக்கொண்டு போகும் ஒருவேளையில் மணியனும் இருந்தான். டாமி இரண்டு காதுகளையும் விரப்பாக்கி கேட்டுக்கொண்டு வந்தான்.   


"எனக்கு ஒரு துப்பாக்கி, கேப்பு, கம்பி மத்தாப்பு எங்கப்பாகிட்ட வாங்கிட்டு வர சொல்லிட்டேன்டா.  போன வருஷம் மாதிரியே இந்த வருசமும் திருடன் போலீஸ் வெளயாடலாம் "


"சுருள் கேப்புல தான் திருடன் போலீஸ் விளையாட முடியும்.  அதனால சுருள் கேப்பே வாங்கிக்கடா"


"போன வருஷம் வாங்குன துப்பாக்கியே எனக்கு  நல்லா இருக்கு, அதுல சுருள் கேப் மட்டும் போட்டா போதும்" 


"நல்லா வேலை செய்யுதான்னு பாருடா, த்ரூ இருக்கும்...தேங்கெண்ணெய் போட்டு சரி பண்ணிக்க.. இல்லான்னா வேலை செய்யாது"


"நாமெல்லாம் ஆலமரத்தடிக்கு போயிடுவோம்.  அங்க போய் விளையாடலாம்.  டாமிய போலீஸா டீம்ல வெச்சுக்குவோம்."


அவனுக்கு புரியவில்லை.  ஆனாலும் அவன் பேரைச் சொன்னதும் காதுகளை மடக்கி, கண்ணைச் சுருக்கி, தலையை தாழ்த்தி,  வாலை ஆட்டி குழைந்தான். விளையாட்டில் அவனும் ஒருவன் என்பதில், டாமிக்கு  மகிழ்ச்சியாக இருந்தது.   


"டேய் டாம், நீ சீக்கிரம்  ஓடி ஓடி கண்டுபிடிச்சிடாத.  எங்களுக்கும் விட்டு வை.  அப்புறம் திருடன் டீம்ல பிஸ்கட் போட்டாங்கன்னா சாப்பிட்டு அப்படியே அவங்களோ ஐக்கியமாக்கிடாத"  குட்டிகளிடைய சிரிப்பலை.  


தீபாவளியும் வந்தது.  


"டேய், சுருள் கேப் நிக்கவே மாட்டேங்குதுடா" ட்ராயர் பாக்கெட்டுக்குள் நிறைய சுருள் கேப் பண்டலை திணித்துக் கொண்டவாரே கேட்டான்.  

"கொஞ்சம் டைட்டா சுத்தி உள்ள வைக்கணும்டா, அப்பத்தான் கரெக்ட்டா வரும்" பொம்மைத் துப்பாக்கியில் சுருள் கேப்பை சுற்றியவாறே பதில் அளித்தான் மற்றோருவன்.  


"எல்லாரும் வந்துட்டாங்களா, நம்ம ஸ்டார்ட் பண்ணலாமா.. "  

"இன்னும் பாலா வரலைடா. அவன் எப்பவும் லேட் தான்.. நாம ஆரம்பிப்போம்"

"எங்கடா டாமி? அவன் இருந்தா தான் களை கட்டும் "

"அட போங்கடா, அவன் வீட்ல காணோம்டா.  நேத்துல இருந்து பட்டாசு போட ஆரம்பிச்சாங்கல்ல. அவனுக்கு அந்த டம் டொம் சத்தம் பிடிக்காது.   பயமா இருந்திருக்கும் போல.  வாலை தணிச்சு சுருட்டிட்டு படுத்துட்டு இருந்தான்.   சரியா சாப்பிட கூட இல்லை.  நேத்து ராத்திரி காட்டுக்குள்ள போய்ட்டான்டா. கொஞ்சம் பட்டாசு சத்தம் கம்மி ஆச்சுன்னா தான் வருவான்.. எப்படியும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவான்".   



திருடன்-போலீஸ் விளையாட்டு ஆரம்பமானது, டாமி இல்லாமல். 



டாமி வெடிச்சத்தம் கேட்காத வண்ணம் காட்டுக்குள் ஓடி ஓரிடத்தை அடைந்தது.  திருடன்-போலீஸில் கலந்து கொள்ளா முடியாத ஏக்கத்தோடு, ஊரையே வெறித்துப் பார்த்துக்கொண்டு படுத்துக்கொண்டது.  



கருத்துகள்